சத்துருவுக்கும் அன்பு! - Christking - Lyrics

சத்துருவுக்கும் அன்பு!


ஒரு கிறிஸ்தவ சிறுமி கடையிலே போய் இரண்டு சிறு கோழிக் குஞ்சுகளை வாங்கி வந்து, அவற்றின்மேல் தன் முழு அன்பை பொழிந்து வளர்த்து வந்தாள். அவள் அவற்றிற்கு கறையான், மற்றும் புழு பூச்சிகளை யெல்லாம் தேடிக் கொடுத்தாள். தன் கைக்செலவுக்குரிய கொஞ்சக் காசையும் கொண்டு தானியத்தை வாங்கி அவைகளைப் போஷித்தாள். குஞ்சுகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாய் வளர்ந்தன.

ஒருநாள் அந்தக் கோழிக்குஞ்சுகள், எதிர்வீட்டுக்காரனின் வேலியின் அருகே மேயச் சென்றன. அவனோ முற்கோபி. இரண்டு குஞ்சுகளின் தலையையும் பிடித்து கழுத்தை முறித்து, வேலிக்கு அப்பால் எறிந்தான். அவை செத்து விழுந்தன.

அந்த சிறுமியின் பிஞ்சு உள்ளம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்! அவளோ கிறிஸ்துவுக்குள் தன்னைத் தேற்றிக் கொண்டாள். அந்த இரண்டு கோழிக்குஞ்சுகளையும், தாயினிடத்தில் கொண்டு போய், “அம்மா, இதை நன்றாக சமைத்துக் கொடுங்கள்” என்றாள்.

சமைத்த இறைச்சியை எதிர்வீட்டுக்காரனுக்குக் கொண்டு போய், “மாமா, நீங்கள் பசியாய் இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். உங்களுக்கு போஜனங்கொடுக்கும்படி என் ஆண்டவர் என் உள்ளத்தில் உணர்த்தினார். இதை கொண்டு வந்திருக்கிறேன்” என்று கொடுத்தாள்.

அந்த வார்த்தையும், அவளுடைய செய்கையும் பக்கத்து வீட்டுக் காரனுடைய உள்ளத்தில் சம்மட்டியைக் கொண்டு அடிப்பதைப் போல இருந்தது. அவன் தலைகுனிந்தது மாத்திரமல்ல, தேம்பித் தேம்பி அழு தான். ஆம், அந்தச் சிறுமியின் செய்கை அவனை மனந்திரும்புதலுக் குள்ளே கொண்டு வந்தது.

இயேசு சொன்னார்: “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதி யுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர் களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” (மத். 5:44).

சத்துருவுக்கும் அன்பு! சத்துருவுக்கும் அன்பு! Reviewed by Christking on August 04, 2017 Rating: 5
Powered by Blogger.